சமூக இடைவெளியை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண


கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள், வைத்தியசாலைகளுக்கு செல்லாது, தொலைபேசியூடாக அறியப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமல்லாது ஊரடங்கு இல்லாத பகுதிகளிலும் சமூக இடைவெளியை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

சமூக இடைவௌி என்ற விடயத்திலிருந்து தவிர்ந்து செயற்பட முடியாது. அத்துடன் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளும் கட்டாயமானதாகும்.

இவற்றிலிருந்தும் தவிர்ந்து செயற்பட முடியாது. உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அதனை மறைக்காது தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால் அவ்வாறு நோய் அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு செல்லாது வீடுகளில் இருந்து தொலைபேசியின் ஊடாக தெரியப்படுத்துங்கள். அதன் பின்னர் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அத்துடன் ஊரடங்கு இல்லாத பகுதிகளில் ஒன்றுகூடல்கள் மற்றும் பயணங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்” என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: