ஜீவன் தொண்டமான் தலைமையில் நியமனங்கள் வழங்கப்படும்

தலவாக்கலை பி.கேதீஸ்


மத்திய மாகாணத்தில் தனது ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்று தனது கோவைகளை பூர்த்தி செய்த 435 ஆசிரியர் உதவியாளர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 1 இற்கு உள்வாங்கப்படவுள்ளனர். 

இவர்களுக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் 23.10.2020 வெள்ளிக்கிழமை கண்டி ஆளுனர் மாளிகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வழங்கி வைக்கப்படவுள்ளன என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இந்நிகழ்வில் குறிப்பிட்ட சிலருக்கே நியமனங்கள் அங்கே வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்கேற்ப ஏனையோருக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன. 

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர் உதவியாளர்கள் இரண்டரை வருடங்களுக்கு முன்பே அவர்களது ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து நிரந்தர நியமனங்களுக்காக காத்திருந்தபோதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு காரணங்களை கூறி இந்நியமனங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியது. தற்போது கௌரவ ஜனாதிபதி கோட்டாபே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளினால் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நான், மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி யு.கே.கமகே அவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கிணங்க இந்நியமனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இன்னும் 1000 இற்கு மேற்பட்டோர் ஆசிரியர்  பயிற்சிகளை நிறைவு செய்யாமலும் அவர்களின் கோவைகளை பூர்த்தி செய்யாமலும் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்று அவர்களின் கோவைகளை பூர்த்தி செய்தவுடன் அவர்களின் நியமனம் தொடர்பாகவும் கருத்தில் கொள்ளப்படும் என்றார்.

No comments: