கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுப்பு

க.கிஷாந்தன்


இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவர்கள் இணைந்தே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச்சில் கொரோனா முதலாவது அலை ஏற்பட்டிருந்த வேளை அது பெருந்தோட்டப்பகுதிக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. தோட்டப்பகுதியில் இருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. கடற்படை இரண்டாவது அலையின் போது அதன் தாக்கம் தோட்டப்பகுதிகளில் ஏற்படவில்லை.

எனினும், 3 ஆவது அலையாக மாறியுள்ள மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலால் பெருந்தோட்டப்பகுதிகளிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் பலர் தமது இருப்பிடங்கள் இருக்கும் தோட்டப்பகுதிகளுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களில் புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் பிரிவில் பெண்ணொருவருக்கு வைரஸ் தொற்று பரவியதையடுத்து 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மஸ்கெலியா மொக்கா தோட்டம், நுவரெலியா – கந்தப்பளை உட்பட மேலும் சில தோட்டப்பகுதிகளில் மினுவாங்கொட ஊழியர்கள் வந்ததால் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.

நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும், வெளியில் அத்தியாவசிய சேவைக்கு வந்தால் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

 

No comments: