ரிஷாட் பதியுதீனுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய குற்றச்சாட்டில் இதுவரை ஏழு பேர் கைது


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய குற்றச்சாட்டில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், தெஹிவளை பிரதேசத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குறித்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பெண் வைத்தியர் ஒருவரும் அவரது கணவர் ஆகியோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புமைய ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்ததாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்க சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்தி, அரசுக்கு சொந்தமான 90 லட்சம் ரூபா நிதியை மோசடி செய்ததாக, பொது உடமைகள் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடியாணையொன்றைப் பெற்று, ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: