கொட்டகலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபர்களை கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு அனுப்பி வைப்பு

க.கிஷாந்தன்


கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூவரையும் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளன.

இவர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக மலையக பிரதான நகரங்களுக்கு அண்மித்த பகுதியில் கொவிட் 19 தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன நலையில் இது குறித்து பொது மக்கள் மிகவும் அவதானமாக சுகாதார பொறிமுறைகளை கடைபித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அட்டன், பொகவந்தலாவ, கினிகத்தேனை, கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இது வரை சுமார் ஏழு பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
No comments: