இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவையாகவும் கொரோனா தொற்று


ஆனமடுவ – தென்னன்கூரியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவையாகவும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி, டுபாயில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீடு திரும்பியிருந்ததுடன், சுய தனிமைப்படுத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக, இரணவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் மீண்டும் வீடு திரும்பியிருந்ததுடன், பொது சுகாதார அதிகாரிகளினால் உரிய முறையில் சுய தனிமைப்படுத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

எனினும், கடந்த 2ஆம் திகதி அவருக்கு மூன்றாவது தடவையாகவும், தொற்று அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நாட்டில் மூன்று தடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு நபர் இவர் என, பொது சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: