அரிசி,கோதுமை, தேங்காய் போன்றவற்றுக்கும் அரசாங்கம் விலைகுறைப்பு செய்ய வேண்டும்-அனுஷா சந்திரசேகரன்


மலையக மக்களின் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அத்தியாவசியமான உணவுப்பொருட்களான அரிசி,கோதுமை, தேங்காய் போன்றவற்றுக்கும் அரசாங்கம் விலைகுறைப்பு செய்ய வேண்டுமென சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டின்மீன், பெரிய வெங்காயம், சீனி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை பற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதே போன்று எம் மக்கள் பிரதான உணவுப்பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தொழிலாளர்கள் பயன் பெறுவது போன்று  பயறு,தேங்காய்,தேங்காய்எண்ணெய் போன்ற பொருட்களும் விலை குறைப்பு செய்யப்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் பலருக்கு சதோச போன்ற நிறுவனங்களிலோ அல்லது கூட்டுறவு சங்கங்களிலோ பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்வதற்கேற்ற  ஓய்வு நேரங்கள் கிடைப்பதில்லை.

அது போலவே கையில் பணத்தை செலுத்தி தமது அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கும் பொருளாதார வசதியும் இவர்களுக்கு இல்லை.

தனியார் கடைகளிலும் தோட்டங்களில் அமைந்துள்ள சிறு சிறு கடைகளிலுமே பெரும்பான்மையானவர்கள் கடனுக்கு பொருட்களை கொள்வனவு செய்து அதனை சம்பளத்தின் போது மீள செலுத்துவார்கள்.

அதனை கருத்தில் கொண்டு சகல தனியார் கடைகளிலும் கூட அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதை அரசாங்கமும் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.

அல்லது இவ்வாறான விலை குறைப்புகளினால் ஏழை தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமன்றி அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்களும் நிச்சயமாக பயன் பெற முடியாமல் போய் விடும்.

எனது தந்தை முதன் முதலாக வர்த்தக வாணிப துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த போது தனது அமைச்சின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை லொறிகளில் கொண்டு வந்து எமது மக்கள் இலகுவான விலையில் பெற்றுக்கொள்ள உதவியதாக அறிகிறேன்.

ஆகவே பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் நிலையை உணர்ந்து இவ்வாறான அடிப்படை உணவுப் பொருட்கள் நியாய விலையில் இவர்களுக்குக் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களிடம் வாக்கு பெற்று வசதி பெற்றவர்களும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வேலும் வலியுறுத்தியுள்ளார். 


No comments: