இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்


மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவல் குறித்து நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,  மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் முடிந்தவரை தமது வீடுகளிலேயே இருக்குமாறும் இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொது மக்கள் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 2ம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை, கொத்தட்டுவை, முல்லேரியா, மருதானை, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை இன்றையதினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறித்த விற்பனை நிலையங்களை திறந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்திற்கு  இரு முறை மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், பரிட்சை நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

வழமைப்போல், பரீட்சை அனுமதிப் பத்திரங்களை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்த முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித வலியுறுத்தியுள்ளார்.

No comments: