அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினூடாக புதிய நெல் உற்பத்தியாளர்களை உருவாக்கும் செயற்றிட்டம்

வி.சுகிர்தகுமார்  


அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் எண்ணக்கருவிற்கு அமைவாக நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் செயற்றிட்டம் விவசாய திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் நிலவும் விதை நெல் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய நெல் உற்பத்தியாளர்களை உருவாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட நெல் உற்பத்தியாளர்களுக்கான விழிப்பூட்டல் பயிற்சி செயமலர்வு இன்று(22) நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீரின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் வளவாளராக அம்பாரை மாவட்ட விதை அத்தாட்சிப்படுத்தல் பிரிவின் உத்தியோகத்தர் ஏ.எம்.ஜவாத் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சி செயலமர்வில் நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ.பெரோஸ் விவசாய போதனாசிரியர் எஸ்.நர்மதன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நெல் உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பாரை மாவட்டத்தில் நிலவும் சிறந்த நெல் விதைக்கான கேள்வி தொடர்பாகவும் அதனை உற்பத்தி செய்ய வேண்டிய விதம் தொடர்பிலும் இதனால் விவசாயிகள் அடைந்து கொள்ள கூடிய அதிக இலாபம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

No comments: