நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் 586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 15 பேருக்கும்,பேலியாகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 467 பேருக்கும்,நாடு திரும்பிய கடலோடிகள்  4 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுறுதியில் இருந்து மேலும் 67 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 5630 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 33 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.

பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 25 பேருக்கும் மினுவாங்கொடை கொத்தணியில் 8 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலிய பொது வைத்தியசாலையில் நாள் ஒன்றில் 60 முதல் 90 வரையான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிடிப்பனை மீன் விற்பனை சந்தையில் கடந்த 24ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நீர்கொழும்பில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 2 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 15 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 4 காவற்துறை அதிகாரிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments: