நோர்வூட் பகுதி மக்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தலைவர் விடுக்கும் அவசர அறிவித்தல்

நீலமேகம் பிரசாந்த்


நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட புளியாவத்தை தோட்டத்தில் 65 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் ரவி குழந்தைவேல் ஊடாக கொரோனா தடுப்பு பற்றிய விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது நோர்வூட் மற்றும் மஸ்கெலியா எம்.ஓ.எச், பொகவந்தலாவ,ஹட்டன்,நோர்வூட்,நோட்டன் பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புளியாவத்தை நகரத்தில்  நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விசேட திட்டம் நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு ஊடாக முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் புளியாவத்தை நகர வியாபார ஸ்தலங்கள்,முச்சக்கர வண்டிகள்,பேரூந்துகள் போன்றவைகளுக்கும் விசேட திட்டம் முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் பொது இடங்களில் தொற்று நீக்கிகளை தெளித்தல்,மக்கள் நடமாட்டத்தினை குறைக்க நடவடிக்கை எடுத்தல், ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றுதல்,நடைபாதை வியாபாரங்களை தற்காலிகமாக தடைசெய்தல்,சகல கடைகளிலும் தொற்று நீக்கிகளை பயன்படுத்தல்,அனைவரும் முகக்கவசம் அணிதல்,சுகாதார இடைவெளியை பின்பற்றல்,முச்சக்கர வண்டியில் பயணிக்கும் சாரதிக்கும் இடையில் பொலீத்தினால் மூடுதல்,ஆலயங்களில் மக்கள் தொகையை குறைத்தல் என பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவிய ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்தவர்கள் இப்பகுதியிலும் காணப்படுவதாகவும் அவர்கள் இங்கு வந்து சென்றமையினாலேயே குடும்பங்கள் தனிமைப்பட்டுள்ளதோடு இவ்விசேட திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ட்ரஸ் நிறுவனத்துடன் இணைந்து நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட 105 தோட்டங்களுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவ்விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு குறிப்பிட்டார்.


No comments: