உதவி ஆசிரியர்கள் நியமனம் வேறு எந்த உப நிபந்தனைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும் - அனுஷா சந்திரசேகரன்


உதவி ஆசிரியர்கள் நியமனம் வேறு எந்த உப நிபந்தனைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உட்பட எம் சமூகம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் பேசும் பொருட்களாக மாத்திரமே உள்ளன.  

எந்த ஒரு பிரச்சினையையும் பேசிக்கொண்டிருப்பது என்பது வேறு தீர்ப்பது என்பது வேறு

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு பிரச்சினையாகட்டும் அல்லது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடான தொழிலாளர் உரிமைகளாக இருக்கட்டும் அல்லது தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான தொழில் பிரச்சினைகளாக இருக்கட்டும் அனைத்துமே விவாதிக்கப்படும் விடயமாகி நீயா நானா என்ற தொழிற்சங்க போட்டியாகி வீணாக் காலம் கடத்தப்பட்டுதான் ஓரளவாவது அதுவும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்படுகின்றன.

தெளிவின்றி பதியப்படுவதாலும் உரிய முறையில் விவாதிக்கப்படாததாலும் பல தொழில் வழக்குகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்து விடுகின்றது.

தொழிலாளர்களின் பிரச்சிரனைகள்தான் இவ்வாறு உதாசீனப்படுத்தப்படுகின்றது என்றால் பயிற்சி ஆசிரியர்களின் நிலை இதனை விடவும் மோசமாக இருக்கிறது.

எமது சமூகத்தின் விடிவும் எதிர்க்கால உயர்வும் கல்வியில்தான் தங்கியுள்ளது என்று கருத்து தெரிவிக்காத மலையக தொழிற்சங்கவாதிகளே இருக்க முடியாது.

ஆனால் இவ்வாறான ஆசிரியர்கள் கூட தங்களின் நிரந்தர நியமனத்துக்காக வீதியில் இறங்கி போராடும் அவல நிலைதான் இங்கே உள்ளது.

நிரந்தர நியமனமும் ஆசிரியர் பதவிக்குரிய கொடுப்பனவுமின்றி தொழில் செய்த இவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு கடந்த கொரோனா கால உதவி தொகையும் மறுக்கப்பட்டது.

அரசாங்க தொழில் செய்யும் ஆசிரியர்களாக இருந்தாலும் கூட பெருந்தோட்டத்துறை சார்ந்தவர்கள் சராசரியான பொருளாதார சுமைக்கு முகம் கொடுத்துதான் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு ஆசிரியருக்குரிய அவ்வளவு கடமைகளையும் செய்தும் கூட பயிற்சி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவது அவர்களின் மனோ வலிமைக்கும் சேவை உணர்வுக்கும் சவாலாகவே அமையும்.

எனவே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதற்கு முன்னரே உறுதியான விளக்கங்களுடனும் தெளிவான சரத்துக்களுடனும் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும்.  

வருடக்கணக்கில் தற்காலிக தொழிலாளர்களாக இருப்பவர்களின் நிலைதான் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டமை வருந்தத்தக்கது.

அதிகாரத்திலிருக்கும் போது அசட்டை செய்யப்படும் பல விடயங்களின் பின்பு தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளாக மாறிவிடுகின்றன.

கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நியமனம் பின்பு தொழிற்சங்க போட்டியாகி யார் தீர்ப்பது யார் அதன் புகழை பெற்றுக்கொள்வது என்ற போட்டி நிலைமைக்கு வந்துவிடுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் தொடரும் போது அது கற்பிக்கும் ஆசிரியர்களின் மன உறுதியையும் சேவை மனப்பான்மையையும் முழுதாக பாதித்து விடுகிறது  என்றும் கருத்து தெரிவித்தார். 

No comments: