ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்-ஜனாதிபதி


ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த நிலைமை மிகத் தெளிவாக விளங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் தினத்தை முன்ன்னிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கஷ்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பாடசாலைகளில் நூலக வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட பழைமையான பஸ்கள் திருத்தியமைக்கப்பட்டு நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச்சபை,  ஶ்ரீலங்கா டெலிகொம் மற்றும் தேசிய நூலகம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு சர்வதேச  புத்தக கண்காட்சியில் வெளியீட்டாளர்கள் நன்கொடையளித்த புத்தகங்களும் குறித்த நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: