தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி


நாட்டின் பல்வேறு தபால் நிலையங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, பல்வேறு பிரதேசங்களில் பொதுமக்கள் கடிதங்கள் மற்றும் பொதிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளமை மற்றும் தபால் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணம், காலி பிரதான தபால் அலுவலகம் மற்றும் அதன் உப தபாலகங்கள், குருணாகலை மாவட்டத்தின் குளியாபிட்டிய மற்றும் அதனை அண்டிய தபால் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஆகியவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சேவைகளை இடைநிறுத்த அல்லது தபால் அலுவலகங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய தபால் அலுவலக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்காக அனுப்பப்படும் கடிதங்களை நாட்டின் ஏனைய தபாலகங்களிலும் ஏற்றுக் கொள்ளாது இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய தபால் பரிமாற்று நிலையம் மற்றும் தபால் திணைக்கள தலைமையகம் ஆகியவற்றினால் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படும் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், தபால் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: