நாட்டில் கொரோனா தொற்றை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது - சுகாதார அமைச்சு

நாட்டில் கொரோனா தொற்றை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஏனைய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போது முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது  நாம்  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அதற்கமைய, தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் தொடர்பில் சுகாதாரத்துறையினர், பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் எதிர்காலத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை முற்றாக பூஜ்ஜியத்தை அடையாது.

இன்னும் சிறிது காலத்திற்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக் குறையும் நிலமையே காணப்படும்” 

அத்துடன்,  மீன் உண்பது தொடர்பில் அச்சமைடய வேண்டாமென விசேட வைத்தியர் ஆனந்த ஜயலால்   குறிப்பிட்டார்.

“பெரும்பாலான பகுதிகளில் மீன் உண்பது தொடர்பில் அச்சம் காணப்படுகின்றது.  மீனுக்குள் வைரஸ்   இருப்பதற்கான சாத்தியம் இல்லை.

ஆனால், மீன் வைத்திருக்கக் கூடிய பகுதிகளில் அதாவது ஐஸ் மற்றும் மீனின் மேற்பரப்பில் வைரஸ் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

அதேபோன்று  வீடுகளில் மீன்களை சேமித்து வைத்திருப்பீர்களானால் அதனை சுத்தம் செய்யும்போது பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு சுடு நீரில் சுத்தப்படுத்துங்கள் என்பதையே நாம் கூறிக்கொள்கின்றோம்.

அத்துடன் மீனில் வைரஸ் இருக்குமானால் சுடுநீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருக்கும்போது அது அழிந்துவிடும்”

மேலும், சுகாதாரத்துறையினர் தொற்றுக்குள்ளானதற்கு காலநிலையும் காரணமாக அமையலாமென விசேட வைத்தியர் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.

“பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கொழும்பு  தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இவ்வளவு காலம் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கியவர்களுக்கு  தொற்று ஏற்படவில்லை.  

பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய சிகிச்சை வழங்கும்போது அவ்வாறு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெளியிடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்ட சுகாதரத்துறையினருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆகையினால் மீன் சந்தையில் அல்லது வேறு பிரதேசங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது சுற்றுச்சூழலும் செல்வாக்கு செலுத்துகின்றது.  

விசேடமாக மேல் மாகாணத்தில் இந்த காலகட்டத்தில் காணப்படும் உஸ்ணமான காலநிலை குறித்தும் எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது.  

பெரிய அளவில் பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது இவ்வாறு சில குறைபாடுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.  

அதாவது 100 பேருக்கு இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது ஏதோவொரு வகையில்  அதில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்  200 பேருக்கு சோதனைகளை முன்னெடுக்கும் போது இருவருக்கு தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: