பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை


நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க உதவுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளளரினால் இதற்கான கோரிக்கை கடிதமொன்று நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நாட்டின் அனைத்து பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களும் இந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் PCR பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் வைத்திய பீடத்தில் இன்றைய தினத்தில் பி.சி.ஆர்  பரிசோதனைகளை முன்னெடுக்க  எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: