உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் பலவீனமடைந்து காணப்பட்டது- முன்னாள் பிரதமர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் பலவீனமடைந்து காணப்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது முறையாக சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வௌிவராமை, இணையத்தளம் ஊடாக மாத்திரம் அவர்கள் தொடர்புகளைப் பேணியமை தெரியவந்ததால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகத்தின்போது தமது தரப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கும் இடையில் அரசியல் ரீதியாக பாரிய கருத்து மோதல்கள் ஏற்படவில்லை எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் போன்ற அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக மாத்திரம் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டங்கள் குறுகிய அறிவித்தலுக்கு அமைய இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கடமைகளை இரத்து செய்து பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு பேரவை கூடுவதற்கான நிலையான நாள் ஒன்றை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: