தேங்காய் விலை அதிகரித்துச் செல்கின்றமைக்கு தீர்வு


தேங்காய் விலை அதிகரித்துச் செல்கின்றமைக்கு தீர்வாக, பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் லொறிகளினூடாக தேங்காய் விற்பனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேங்காய் , கித்துல் , பனை மற்றும் இறப்பர் அபிவிருத்தி, ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பிலியந்தலை, ஹொரணை, கண்டி, நுவரெலியா, காலி உள்ளிட்ட பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் 60 தொடக்கம் 70 ரூபா வரை தேங்காய் விற்பனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அமைச்சுக்குட்பட்ட சிலாபம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டப்பகுதிகளில் இருந்து பெறப்படும் தேங்காய்களை விற்பனை செய்யவுள்ளதாக திஸ்ஸ ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேங்காய் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு தேங்காய் ஏல விற்பனை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: