பேருந்து விபத்தில் 35 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் டயகம பகுதியில் இருந்து போடைஸ் ஊடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் 02.10.2020.வெள்ளிக்கிழமை காலை  7.15 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

காலை டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளதாகவும் காயமடைந்த பயணிகளை 1990 நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாகவும் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

விபத்தில் காயமடைந்த 35 பேரில், 24 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள்  குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: