ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் 20 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் தேசிய வேலைத்திட்டம்

வி.சுகிர்தகுமார்  


அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கில் முக்கிய எண்ணக்கருவாக கருதப்படுகின்ற 'பயனுள்ள பிரஜை மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்' எனும் எண்ணக்கருவை வலுப்படுத்தும் 20 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் தேசிய வேலைத்திட்டம் இன்று (21) நாடளாவீய ரீதியில் 14022 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் மற்றும் குடும்பத்தினை மையப்படுத்திய வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தும் வகையில் குடும்ப அலகுகளை வலுவூட்வதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக இவ்வருடத்தின் பெரும்போகத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் இன்று இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் கலந்து கொண்டு வீட்டுத்தோட்ட பயிர்க்கன்றுகளை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

வறுமையை ஒழித்து பொருளாதார மற்றும் போசனை பெறுமானம் ஏற்படுகின்ற வகையில் இடம்பெறும் இத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 3300 பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கப்பட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று மிளகாய், கறிமிளகாய், கத்தரி, தக்காளி என நான்கு வகை பயிர்க்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கான விதைப்பொதிகளும் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வில் பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் தெ.கமலபிரபா, முகாமைத்துவ பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: