கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 119 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மைத் தன்மை கிடையாது-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண


கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மைத் தன்மை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சில ஊடகங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 119 பேர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அவ்வாறான தகவல்களில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மினுவாங்கொடை பிரதேசத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்களையும், குறித்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், குறித்த விடயத்துடன் தொடர்புடைய அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் கடந்த இரண்டு வாரங்களில் தொடர்புகளைப் பேணியவர்கள் குறித்து அறியத்தருமாறு அவர் கோரியுள்ளார்.


No comments: