பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானம்


தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது 96 ஆயிரத்து 919 TAB உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதன் காரணமாக, குறித்த TAB உபகரணங்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைக்காக 3 ஆயிரத்து 9 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த TAB உபகரணங்களில், பெரும்பாலானவற்றை மாணவர்களுக்கும், ஏனையவற்றை தேவைக்கேற்ப ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தரவுகளை உள்ளீடு செய்யும் செயற்பாடுகளுக்காக சுமார் ஆயிரத்து 500 TAB உபகரணங்களை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டிலும் வவுச்சர் முறை மூலம் பாடசாலை சீருடைகளைப் பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: