தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ள கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ள NEW DIOMEND கப்பலின் தற்போதைய நிலைமைக் குறித்து தெளிவுப்படுத்தி விசேட ஊடகச்சந்திப்பில் இலங்கை கடற்படை இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே  கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இலங்கை கடற்படைக்கு சொந்தமான  3 கப்பல்கள் இந்தியாவுக்கு சொந்தமான 2 கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த யுத்தக்கப்பல் என மொத்தமாக ஆறு கப்பல்கள் மற்றும்  8 படகுககள் குறித்தபகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டீ சில்வா தெரிவித்தார்.மேலும், குறித்த கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கான இரசாயன பொருட்களுடனான விசேட கப்பலொன்றும் குறித்த பகுதியிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் காணாமல் போயிருந்த கடற்படை உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த கடற்படை உறுப்பினர் இன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்பில்  விபத்துக்குள்ளான MT New Diamond கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்ட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு இன்று விசேட குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொதுமுகாமையாளர் கலாநிதி டெர்னி  பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

பனாமா நாட்டின் தேசிய கொடியுடன்  2 லட்சத்து 70 ஆயிரம் லீற்றர் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் மற்றும் ஆயிரத்து 700 மெற்றிக் தொன் டீசல் ஆகிவற்றுடன் குவைட்டில் இருந்து இந்தியா நோக்கிபயணித்த எண்ணெய்க் கப்பல் 38 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நேற்று முற்பகல் தீவிபத்துக்குள்ளானது. குறித்த கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் 23 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களுள் பெருமளவானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வர்த்தகக் கப்பலில்பயணித்த 19 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த கப்பலின் பொறியியலாளர் காயமடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய நபர்கள் கடற்படையினரின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து கப்பல் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கப்பலுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுமாயின் அதனூடாக கடலுக்கு பாதிப்பு ஏற்படும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையின் கிழக்கு, தென் மற்றும் மேற்கு கடற் பிரதேசங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு இந்த நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நிறுவனங்களை இணைத்துக்கொண்டு வினைத்திறனுடன் செயற்பட்டுவருவதாகவும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: