மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான திட்டம்எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டின் மருந்து தேவையில் 50 வீதத்தினை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,சர்வதேச சந்தை மற்றும் பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதே இதன் நோக்கமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து தயாரிப்புகளும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் தரத்திற்கமைய தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை மையப்படுத்தி ஹம்பந்தோட்டை தொழிற்துறை பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் மருந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,மருந்து உற்பத்திகளை மேற்கொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள் இணைந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  பொது மக்களுக்கு குறைந்த விலையில்  மருந்தை வழங்குவதற்காக நாடுமுழுவதும் 100 மருந்தகங்கள் அமைப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளுக்கு மருந்துகளை வழங்கும் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: