வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள எச்சரிக்கை

சீரற்ற வானிலைக்காரணமாக உணவட்டுன ரூமஸ்சல பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கித்துள் மரமொன்று குறித்த பெண் வசித்துவந்த வீட்டின்மீது சரிந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள், சிறியரக கப்பல்கள் மற்றும் படகுகளில் கடலுக்கு செல்வோர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கங்களில் இருந்தும் ஏனைய அனர்த்தங்களில் இருந்தும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: