வடக்கு கிழக்கில் இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பொலிசாரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுப்பு

-கனகராசா சரவணன்-


இலங்கையின் இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவாறு முழு நாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், தலைவருமான இரா.துரைரெத்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் பொலிஸ் பிரிவை வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. பொலிஸ் பிரிவினரை ஓழுக்கமுள்ள சிறப்பான சட்டம் ஒழுங்கு  கொள்கைகளைத் தாங்கி அதை அமுல்படுத்துகின்ற பொலிசார் பல்லாயிரக் கணக்கானோர் இருந்தாலும் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுகின்ற ஒருசில பொலிசாரும் ஏனைய பிரிவுகளில் கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள் தொடக்கம் குறிப்பிட்ட சிலர் தவறுகளை செய்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது.

நீதித்துறையை அமுல்படுத்துவதில் கூடுதலாக பொலிசாருக்கு பங்குண்டு. இந்த வகையில் வடக்கு கிழக்கில் கடமையாற்றுகின்ற பொலிசார் மொழி தொடர்பான விடயங்களில் பல முரண்பாடுகள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இத்தோடு போக்குவரத்துப் பொலிசாரினால் வழங்கப்படும் பல வகையான பற்றுச் சீட்டுக்கள் சிங்கள மொழியில் எழுதப்படுவதனால் அவை தொடர்பான தெளிவு சம்பந்தப் பட்டவருக்கு தெரியாத நிலையில் உள்ளதோடு, சில பொலிஸ்  நிலையங்களுக்கு சென்றால்கூட மொழிவிடயங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இது தொடர்ச்சியாக நடந்து வருவதனால் மொழி தெரியாத தமிழ் மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொலிஸ்பிரிவை செயற்திறன் கொண்டதாக மாற்ற முயற்சிக்கும் நீங்கள் வடக்கு கிழக்கில் தமிழ்பகுதியில் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் பொலிசாரை நியமிக்க நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பொலிசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பலவருடங்களாக போக்குவரத்துப்பொலிசாரும், போக்குவரத்துச் செய்கின்றவர்களும் பல சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இது எதிர்காலத்தில் ஆரோக்கியமான விடயமாக இருக்காது. ஏன அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 

No comments: