கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை ஒரு சில பாடசாலைகள் தவிர்த்து வருவது தொடர்பில் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை பாடசாலைகளுக்கு விடுத்திருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட்டிருக்கின்றன.அதனால் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல் வழிமுறைகளை தொடர்ந்நும் கடைபிடித்து வரவேண்டும்.

இது தொடர்பாக பாடசாலை பொறுப்பதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கின்றோம்.

என்றாலும் பாடசாலை வளாகத்துக்குள் தொற்று நீக்கல், முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் தொடர்பில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து பாடசாலை சமூகமும் தற்போது கவனக் குறைவாக செயற்படுவதாக ஒரு சில பாடசாலைகள் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

அதனால் குறிப்பாக பாடசாலை போக்குவரத்து  சேவை வழங்குதல்,சிற்றுண்டிச்சாலைகளை மேற்கொண்டு செல்லுதல் உட்பட பாடசாலை மாணவர்கள் நேரடியாக சமூகத்துடன் ஒன்றுசேரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சமூகப்பொறுப்பு பாடசாலை பொறுப்பதிகாரிகள் உட்பட பாடசாலை சமூகத்துக்கு இருக்கின்றது.

மேலும் கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடர்பான அச்சுறுத்தல்,இதுவரை நாட்டில் இருந்து நீங்கவில்லை எனவும் ஒருவேளை அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால்  அதனால் அதிகம் பாதிக்கப்படுவது பாடசாலை பிள்ளைகளாகும்.

அதனால் உரிய சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து கடைபிடித்து, சுகாதார பாதுகாப்பை பேணிவருவதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் கடமையாக உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: