இயற்றையோடு போராடும் திருக்கோவில் பிரதேசமும் மீண்டும் பூதகரமாக உருவெடுத்துள்ள இல்மனைட் விவகாரமும்.

 செல்வி வினாயகமூர்த்தி

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசமானது இயற்கைவளம் நிறைந்த பசுமையான ஒரு பிரதேசமாகும் .கடல் மற்றும் தரைவளங்கள் அதன் முதுகெலும்பாக காணப்படுகின்றது.தென்கிழக்கு கடற்கரையில்  இயற்கை எழிலுக்கு பெயர்போன இடமாக திருோவில் மற்றும் அறுகம்பை திகழ்கிறது.

இத்தகைய எழில் வளத்துக்கும் நீர்வளத்துக்கும் பெயர் போன திருக்கோவில் பிரதேசமானது அண்மைக்காலமாக மெல்லக் கொல்லும்  கடலரிப்பு காரணமாக இப் பிரதேசம் பாரிய அழிவை எதிர் நோக்கி வருகின்றது.

வடக்கே பெரியநீலாவணை முதல் தெற்கே  அறுகம்பை வரை 2004 ஆழிப்பேரலைக்கு பின்னர் வேகமான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றமையும்  சூறாவளி, சுனாமி ஆகிய இயற்கை பேரழிவிற்கு முகம்கொடுத்து பாரிய அழிவை சந்தித்து வருகின்ற  ஒரு பிரதேசமாகும் காணப்படுகின்றது.

கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் அளவான தூரம் வரை மண்ணரிப்புக்குள்ளாக்கப்பட்டு கடல் நீர் பல தவைகள் திருக்காவில் பிரதேசங்களில் உட்புகுந்துள்ளது.நீலாவணை தொடக்கம் அறுகம்பை வரையான 95 கீலோ மீட்டருக்கு உட்பட்ட பிரதேசம் கடலரிப்பினால் பெருமளவு நிலங்கள்  காவு கொள்ளப்பட்டு கடலுவிழுங்கும் கிராமங்களாக மாறியுள்ளன.

உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்ந்து செல்லும் நிலையில் பெருமளவு நிலப்பகுதிகள் கடலால் காவு கொள்ளப்படும் அபாயம் நிலவிவருகின்றது.

அக்கரைப்பற்று ,சின்னமுகத்துவாரம் ,தம்பட்டை,தம்பிலுவில், திருக்கோவில், வினாயகபுரம் தாண்டியடி கோமாரி ,பொத்துவில்,அறுகம்பை முதலான பிரதேசங்கள் கடலரிப்புக்குள்ளாகி வரும் நிலையில் கிழக்கிலங்கையில் வரலாற்று  புகழ்பெற்ற சித்திரவேலாயுதசுவாமி ஆலய முன்பகுதியும் கடலரிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.  ஆலயத்துக்கு சொந்தமான தீர்த்தமாடும் கிணறு அதனோடு இணைந்த மீனவர் கட்டிடம் கடற்கரை வீதியும் கலடரிப்பினால் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை  மீனவர்களது வள்ளங்கள் ,மீன்பிடி வாடிகள்,மீனவ கட்டிடங்கள்,குடியிருப்புக்கள், மயானம்,வீதிகள் என்பன கடலரிப்பினால் காவுகொள்ளப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.மீனவர்களால் வள்ளங்கள் நிறுத்தி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்.பெறுமதி வாய்ந்த பல வள்ளங்கள் கடல் அலைகளினால் அடித்துச்செல்லப்பட்ட துயர்தாங்கிய மீனவ கதைகளும் இங்குள்ளன.
இதேவேளை கடல் கரைகளில் நடப்பட்டுள்ள தென்னை மரங்கள் வேகமான கடலரிப்பினால் கடலுக்கு இரையாகியுள்ளன.இதனால் தெங்கு செய்கைக்கும் இப்பகுதியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதேவேளை கடற்கரை பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவக்கப்படுகின்றது.

கடலரிப்பிற்கான காரணங்கள்.
____________________

பொதுவாக காற்றுவேகம் ,கடல்நீரோட்டம்,அலைவேகம்,போன்ற இயற்கை காரணிகளாலும் கடலோர மண் அகழ்வு,கடலோர ஆக்கிரமிப்புக்கள்,இல்மனைட் அகழ்வு,போன்ற மனித செயற்பாடுகள் காரணமாகவும் கடலரிப்பு ஏற்படுகிறது. 

இதனால் கடல் நீர் உட்புகுதல் ,குடிநீர் உவராதல்,மனித வாழ்விடங்கள் இழக்கப்படல்,முதலான அனர்த்தங்கள் நிகழலக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.2004 ல் பாரியளவில் சுனாமிக்கு முகம் கொடுத்து அதிகசேதங்ளையும் உயிரிழப்புக்களையும்  எதிர்கொண்ட இப்பிரதேசம் மேற்சொன்ன காரணிகளால் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் ஏற்படுமாயின் அழிவுகள் பாராதூரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இதேவேளை உரிய அதிகாரிகள் கவனத்துக்கு கடந்த ஆண்டுகளில் கொண்டு சென்ற போதும் இவற்றை தடுப்பதற்கான மாற்றீடான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பவில்லை.

மெல்லக்கொள்ளும் கடலரிப்பினால் இப்பிரதேசம் காவுகொள்ளப்படும்அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அண்ணையில் இல்மனைட் அகழ்விற்கான  ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தனியார்நிறுவனம் ஒன்று அங்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆய்வுகளை நடாத்தியுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருக்கோவில் பகுதியில்  அவுஸ்ரேலிய தனியார் கம்பனி ஒன்று இல்மனைட் அகழ்வுக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தத போதும் பொதுமக்களின்எதிர்பினையடுத்து கைவிடப்பட்ட நிலையில் இம்மாதம் முதலாம் திகதி வேவொரு தனியார் கம்பனி பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட தாண்டியடி, உமிரி பிரதேசத்தில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆய்வை  மேற்கொண்டுள்ளது.இருப்பினும் உரிய அதிகாரிகளினாலும் பொதுமக்களின் எதிர்ப்பினாலும் இவ் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறன கனிய வள கொள்ளையர்கள் எமது கிழக்கு கடல் பரப்பை குறிவைத்து படையெடுக்க காரணம் இலங்கையானது தொல்காலப்பாறையில் அமைந்திருப்பதாதோடு கனிய வளங்கள் இலங்கை வடகிழக்கு கடப்பரப்பிலே நிறைந்து வழிந்து கிடக்கிறது.

நாட்டின் தேசிய வருமானத்தில் 02% சதவீதமான இலாபத்தை இலங்கைக்கு அந்நிய செலவாணியாக ஈட்டித்தரும் மணல்படிமங்கள்  கிழக்கில் பல இடங்களில் கொட்டிக்கிடக்கிறது.இல்மணைட் மணல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் எமது இலங்கை முதன்மை பெறுகின்றது. இருப்பினும் குறிப்பிட்ட கடற்கரை பிரதேசத்தில் ஏற்படுத்தப்படும் அகழ்வினால் ஆழம் அதிகரிக்கப்படுவதோடு  கடலரிப்பினால் வருடந்தோறும் காவு கொள்ளப்பட்டு அழிவின் விழிம்பில் எமது பிரதேசம் நிற்கும். 

கொள்ளை இலாபம் கொள்ளும் தனியார் கொள்ளையர்களின் கனிய வளங்களின் அபகரிப்பினால் எமது பிரதேசம் மேலும் மேலும்  அச்சுறுத்தலை எதிர் நோக்க வேண்டிய தொரு பாரிய சூழ்நிலையே ஏற்படும்.இவ்வாறான வளங்களை சுரண்டுவதற்கு எமது பிரதேச அதிகாரிகளும் மறைமுகமாக துணை போவது வேதனைக்குரிய விடயமாகும்.

திருக்கோவில் பிரதேசத்துக்கு மக்கள் தனது ஜீவனோபாய தொழிலாக விவசாயம் ,மீன்பிடித்தல் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவ்வாறு இல்மனைட் அகழ்வினால் நீர் நிலைகளின் சமநிலைகள் பாதிக்கப்பட்டு நீர்வளம் குன்றுவதோடு குளங்கள்,ஆறுகள் பாதிக்கப்படுவதோடு இல்மனைட் அகழ்வின் பின்னர் 500 க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ  வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படப்போகின்றது.

இல்மனைட் அகழ்வில் போது கடற்கரை பிரதேசங்களிலுள்ள நிலத்தின் மேலுள்ள தாவரங்கள் அகற்றப்படுவதனால்  வெப்பம் நேரடியாக பூமியைத்தாக்குவதுடன் அருகாமைக் கடலிருந்து வெளிவரும் குளிர் காற்று வெப்பமடைவதனால்  மழையின் அளவிலும் தன்மையிலும் மாற்றமடையும்.இதனால் கடலுக்கருகாமையில் குடியிருப்புக்கள்  இருப்பதனால் அருகிலுள்ள நிலப்பிரதேசங்களில்  கடல் நீர் உட் புகுவதனால் குடிநீரில்  உப்பு நீர் கலந்து பாவனைக்கு உதவாத நீராகவும் நீர் பற்றாக்குறையும் வரட்சியும்  ஏற்படலாம்.

இதேவேளை இல்மனைட்டுக்கான  தாது மணல் இப்பகுதியிலே பிரித்தெடுக்கப்படுவதால் இராசயன  கதிர்வீச்சுதாக்கங்கள் ஏற்பட்டு பின்னாலில் மரபணு நோய்கள்  புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும்  கூறப்படுகிறது.

எமது பிரதேசத்தில் மண் மாபியாக்களால்  பாரிய அழிவை ஏற்படுத்தப்படுத்தப்போகின்ற இவ் நடவடிக்கையை தடுத்து நிறுத்தப்படுவதோடு எமது பிரதேசத்தின் அழகு மிகு கரையோரம் மற்றும் இயற்கை சமநிலையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே எமது பிரதேசத்தை கடலரிப்பு ,இல்மனைட் தொழிற்சாலை என்பவற்றிலிருந்து காப்பதோடு  மேற்படி இல்மனைட் மாபியாக்களை எமது பிரதேசத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகளும்  இப்பிரதேச மக்களும் எடுக்க நிச்சயம் முன்வரவேண்டும் .

No comments: