நாம் அரசியலுக்காக திறந்து வைக்கவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியே எமது இலக்கு - ராமேஷ்வரன் தெரிவிப்பு

 (க.கிஷாந்தன்)

 

கல்வி வளர்ச்சி மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

 

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

இப்பாடசாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டு 2 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தொடர்பில் எமக்கு தெரியவந்ததையடுத்து, எமது பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்தின் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று கட்டிடத்தை திறந்துவைப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

 

இதனை நாம் அரசியலுக்காக திறந்து வைக்கவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியே எமது இலக்கும். அதற்கான வழியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வரை காங்கிரஸின் தலைமையின் கீழ் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை, சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

 

கல்வி வளர்ச்சிமூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்றுவரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. எமது தலைவர்களும் நிதிகளை ஒதுக்கினர். ஜீவன் தொண்டமானும் தற்போது கூடுதல் கவனம் செலுத்திவருகின்றார். இது தொடர்பில் அவர் உரிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றார்."  - என்றார்.


No comments: