பாடசாலை மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடை விநியோகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் - ஜனாதிபதி


அடுத்த வருடம் முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடை விநியோகத்தில், உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாரிய மற்றும் சிறு அளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிக ஈடுபாட்டுடன், உயர் தர ஆடை உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டைக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாடசாலை சீருடைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கூப்பன் முறைமையினால், பாரிய நிதியை முதலீடு செய்த நிறுவனங்கள் தற்போது தமது நிறுவனங்களை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கைத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆடை உற்பத்தியை விரைவில் மீள ஆரம்பிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, சுய தொழில் என்ற ரீதியில் ஆடை உற்பத்தியில் ஈடுபடுவோருக்காக பாடசாலை சீருடை விநியோகத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான திட்டம் தொடர்பில் ஆராயுமாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக 68 வீத ஏற்றுமதி செலவை குறைத்துக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.

உள்நாட்டு ஆடைகளை கொள்வனவு செய்வதன் மூலம், கல்வி அமைச்சுக்கு வருடமொன்றில் 80 மில்லியனுக்கும் அதிக தொகை நிதியை சேமித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டாமென ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அவற்றுக்கான கேள்வியை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: