நாட்டில் கொரோனா தொற்று ஆபத்து நீங்கவில்லை-மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு

அண்மைக்காலமாக சமூகத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை  என்றாலும்,  ஆபத்து நீங்கவில்லையென மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ இதனைத் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமெனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3121 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2918 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 79 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன்,  கொரோனா தொற்றுக்குள்ளான 191 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 39 ஆயிரத்து 907 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: