பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை-ஜனாதிபதி


பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ள லயன் குடியிருப்பு தொடர்பிலும், அதற்கான மாற்று வீட்டுத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகள் அமைக்கும் திட்டமானது ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை 669 வீடுகள் மாத்திரமே முழுமை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லயன்களுக்கு பதிலாக குறித்த மக்களுக்கு வீட்டுதிட்டத்தை பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், வீட்டுத்திட்டம் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக அரச தொழிநுட்பவியலாளர்களை ஈடுப்படுத்துவதன் ஊடாக அதன் தரத்தையும், விரைவுப்படுத்தலையும் உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட பகுதிகளில் இவ்வாறு அபிவிருத்திகளை முன்னெடுக்கும் அதேசமயம், தனியார் துறைசார்ந்த மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாலர் பாடசாலை, சுகாதார வசதிகள், பாடசாலைகள் என்பன அபிவிருத்தி செய்யப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட இளைஞர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதுடன், NVQ சான்றுதழ்களை பெற்றுக்கொள்வதுடன் அதனூடாக தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் அளவிலான பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 438 சுகாதார மத்திய நிலையங்களை அரசாங்க பொறுப்பில் பெற்று, முறையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பண்டாரவளை, அட்டன், நுவரெலிய மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: