இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைக்கு பதிலாக அந்தந்த நாட்டில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவை இராஜதந்திரிகள் சமர்ப்பிக்க முடியும் என்ற நடைமுறை காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், பி.சி.ஆர் பரிசோதனைகளை இராஜதந்திரிகளுக்கு கட்டாயமாக்குவது குறித்து சுகாதார அமைச்சிற்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சட்டங்கள் இலங்கையில் உள்ள எவராலும் பயன்படுத்தப்பட வேண்டும் ஆகவே இராஜதந்திரிகளும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு இராஜதந்திரி சமர்ப்பித்த பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் ஆனால் 7 முதல் 10 ஆம் நாள் வரை மற்றொரு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர்கள் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: