பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் நிலை பற்றி அனுஷா சந்திரசேகரன் கண்டனம்


வெள்ளையர்களால் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்ட காலத்தை விடவும் தற்போது பெருந்தோட்ட துறை தொழிலாளர்கள் அதிகமான அடக்கு முறைகளுக்கும் அநீதிகளுக்கும் உள்ளாக்கப்படும் நிலை அதிகரித்து வருகின்றது என்று  சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பெருந்தோட்டத்துறையில் தற்போது தோன்றியுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அதிகரித்த செயற்பாடுகள் சம்பந்தமாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த காலங்களில், தொழிற்சங்க சட்டங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பு இப்போது வழங்கப்படுவதில்லை.

எமது தொழிலாளர்களுக்கான அடிப்படை தேவைகளில் ஓரளவாவதை பூர்த்தி செய்து தான் இலாபம் தேடினார்கள். அன்று வழங்கப்பட்ட பல சலுகைகள் இப்போது  வழங்கப்படாத நிலையில் தொழிலாளர்கள் தாங்கள் இன ரீதியான பாகுபாட்டுக்கும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களுக்கும் உள்ளாவதாகவும் உணர்கிறார்கள்.

நிர்வாகங்களால் தாம் கேவலமாக நடாத்தப்படுவதாக உணரும் இவர்களின் நலனில் மலையக தொழிற்சங்கங்களும் பாராமுகமாக இருப்பது தான் வியப்பான வேதனையாக இருக்கிறது.

முதல் நாள் தொழிலுக்கு செல்லும் ஒரு தொழிலாளிக்கு நிர்வாகம் அடுத்த நாள் சர்வ சாதாரணமாக வேலைநிறுத்துகிறது.

ஆகக் குறைந்தது தொழிற்சங்க மட்டத்திலாவது விசாரணை நடத்தாமல் தொழிலாளர்களை வீதியில் விடுவது சம்பந்தமாக தொழிற்சங்கத் தலைமைகளுக்கு தெரியாதா?

அப்படியென்றால் கூட்டு ஒப்பந்தம் தொழில் நீதிமன்றம் உதவி தொழில் ஆணையகம் என்பதெல்லாம்  இதில் என்ன நடவடிக்கை எடுக்கின்றன கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே எனது தந்தை இதன் சரத்துக்கள் பலவற்றை எதிர்த்தார்.  

நிர்வாகங்களின் கெடுபிடியால் தொழிலாளர்கள் தாமாகவே தொழிலிருந்து விலகிசெல்லும் நிலை ஏற்படுத்தப்படுவது இன்னொரு அநீதியாகும். நிரந்தர தொழிலாளர்களை விடவும் தற்காலிக தொழிலாளர்களை ஈடுபடுத்தி லாபம் ஈட்டும் செயலை கம்பனிகள் லாவகமாக செய்துவருகின்றன.

தோட்டங்களில் நான்கு வருடங்களுக்கும் மேலான தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள் நிரந்தரமாக்கப்படாமல் உள்ளார்கள்.

இதன் மூலமாக பெரும் தொகையான  நலன்களை தொழிலாளர்கள் இழக்கின்றார்கள். இந்த சாதாரண விடயங்களைக் கூட தீர்க்க முடியாத மலையகத் தொழிற்சங்க தலைமைகள் அமைச்சுப்பதவிகளுக்காக தவித்துக் கொண்டிருப்பது துரோகமான செயலாகாதா?

மேலும் தொழிற்சங்கம் தேசிய மட்டத்தில் எமக்கு சம்பந்தமில்லாத விடயங்களிலெல்லாம் கருத்து தெரிவிக்கும் மலையக தொழிற்சங்க வாதிகள் எரியும் நெருப்பில் வாழ்ந்துக் கொண்டு தமது எதிர்காலத்துக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் எமது தொழிலாளர்கள் பற்றியும் அவர்களுக்கான தொழிற்சங்க சட்ட அமுலாக்கம் பற்றியும் ஓரளவாவது அக்கறை காட்டி செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments: