மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன-பிரதமர்நல்ல மாணவர்களை உருவாக்குதல் பாடசாலைகளின் பணியாவதுடன், அவர்களின் எதிர்காலத்தினை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும்.

இன்று நடைபெற்ற கொழும்பு இந்து கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பரிசளிப்பு விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன. 

நாட்டின் வளம் என்பது நல்ல மாணவர்களை உருவாக்கி கல்வியில் முன்னிலையில் இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்து சுபீட்சமான வாழ்வினைக் கொண்டாடும் சமூகச்சூழலை ஏற்படுத்தி முழு நாட்டினையையும் செல்வச் செழிப்புடன் ஆக்கும் ஒருபெரும் முயற்சியாகும். கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எக்காரணியும் ஏற்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை.

கல்விச் செல்வமே அழியாததும் பிறர் கொள்ளை கொண்டு போக முடியாததுமாகும். கல்வியை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாட்டிற்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் உன்னத சேவையை ஆற்றுகின்றன.

கல்விச் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி எம் நாட்டின் கல்வி வளர்ச்சியை மேன்நிலைக்கு கொண்டுசெல்வதே எமது இலட்சியமாகும்.

இன்று கொரோனா தொற்று பிரச்சினையை உலகளாவிய சவாலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இப்பெரும் சவாலை கட்டுக்குள் வைத்துள்ளோம். இந்த பிரச்சினைகளினால் பாடசாலை பிள்ளைகளாகிய உங்களின் கல்வி பாதிப்படையக்கூடாது.

கல்வியில் போன்றே மாணவர்கள் விளையாட்டு துறையிலும் ஈடுபட வேண்டும். உங்களை போன்றே வடக்கு கிழக்கு மற்றும் மலையக மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை அறிய முடிந்தது. எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கும் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: