இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ள பிரேமலால் ஜயசேகர

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

பிரேமலால் ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நேற்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 வரை பாராளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இன்றைய அமர்வின் போது, 28 அமைச்சுசார் ஆலோசனைகள் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.


நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், நாளைய தினம் உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 9 ஒழுங்குவிதிகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


அத்துடன், நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 6 தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


மேலும், எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: