இன்று சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ள தீ விபத்துக்குள்ளான கப்பலின் நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை


தீப்பற்றிய New Diamond கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்த அனைத்து வகையான எரிபொருட்களினதும் மாதிரிகள், நேற்று கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

குறித்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கப்பலில் பரவிய தீயை அணைப்பதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட தொகையை மீள அறவிடுவதற்காக இந்நாட்களில் இழப்பீடு தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அது தொடர்பான அறிக்கை கப்பலின் உரிமைக்குரிய நிறுவனத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படுமென கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் விசேட குழுவினால் New Diamond கப்பலில் இருந்த அனைத்து எரிபொருட்களின் மாதிரிகளும் பெறப்பட்டன.

மேலும், இலங்கை கடற்படையின் விசேட குழுவினால் கப்பல் காணப்பட்ட ஆழ்கடலில் எரிபொருள் கசிவு உள்ளதா என்பது தொடர்பில் நேற்று ஆராயப்பட்டது.

அத்தகைய எரிபொருள் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லையென கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: