சுத்தமான குடிநீர் இல்லை - குடா மஸ்கெலியா கிராம மக்கள் வேதனை

 (க.கிஷாந்தன்)

 


160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலேயே குடா மஸ்கெலியா கிராமம் அமைந்துள்ளது. 1,880 ஆம் ஆண்டு முதல் அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

மேற்கில் மவுசாகலை நீர்த்தேக்கமும், கிழக்கில் காசல்ரீ நீர்த்தேக்கம் என நீர்வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மக்களும் வாழ்கின்றனர். 160 குடும்பங்களில் பெரும்பான்மையாக சிங்கள மக்களே வாழ்கின்றனர்.

 

எனினும், சுத்தமான குடிநீரை பெருவதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கிராமத்துக்கு நீர் வழங்கும் நீர்த்தாங்கி மாசுபட்ட நிலையில் காணப்படுகின்றது எனவும், அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாமையால் அசுத்தமான நீரையே பருகவேண்டியுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

அதுமட்டுமல்ல விலங்குகளும் இப்பகுதிக்கு வருவதால் கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் என அஞ்சும் மக்கள், நீர்சுத்திகரிப்பு திட்டமொன்றை தமக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோருகின்றனர். அரசியல்வாதிகளால் நீர்த்தாங்கியொன்று அமைக்கப்பட்டிருந்தாலும் அது புனரமைப்பின்றி காணப்படுகின்றது. எனவே, நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் ஊடாக தமது கிராமத்துக்கு சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.No comments: