சுற்றாடல் அறிக்கையை பெறாமல் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பான அறிக்கை


சுற்றாடல் அறிக்கையை பெறாமல் கடுவளையில் இருந்து பேலியகொடை வரை களனி கங்கையின் இருமருங்கிலும் 4000 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சுற்றாடல் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சுற்றாடல் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவளையில் இருந்து பேலியகொடை பாலம் வரையிலான பகுதியில் களனி கங்கையின் இருமருங்கிலும் 7000 வர்த்தக நிலையங்கள் உள்ளதாக சுற்றாடல் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதில் சுற்றாடல் அறிக்கையை பெற்று 3000 வர்த்தக நிலையங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வர்த்தக நிலையங்களில் இருந்து வௌியேற்றப்படும் கழிவு நீர் தொடர்பில் துரிதமாக மதிப்பீடு செய்யப்படவேண்டும் என சுற்றாடல் அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், களனி கங்கையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் முறையான மலசலகூட கட்டமைப்பு இல்லையெனவும், இதனால் மலசலகூட கழிவுகள் தொடர்ச்சியாக ஆற்றினுள் வௌியேற்றப்படுவதாகவும் சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றாடல் அறிக்கையை பெறாமல் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பில் துரிதமாக மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: