இன்று இடம்பெறவுள்ள புதிய பாராளுமன்றத்தின் கோப் குழுவின் முதலாவது கூட்டம்


புதிய பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், கோப் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும்,இதன்போது கோப் குழுவின் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பாக்கப்படுவதாகவும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், அரசாங்க கணக்குகள் குழு எனப்படும் கோபா குழு நாளைய தினம் முதற்தடவையாக கூடவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, செயற்குழு உறுப்பினர்களுள் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுக்களுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு,அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் ஏனைய நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற்றை கண்காணிக்கும் அதிகாரம் கோபா குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: