ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீடு வழங்கப்பட வேண்டும்-ஜனாதிபதி தெரிவிப்பு


கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சுபீட்சமான நோக்கு கொள்கைக்கமைய, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நகர்புற, கிராமபுற மற்றும் தோட்ட மக்களின் வீட்டு வசதி பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டுமெனவும், இதனால் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடையுமெனவும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி,  வங்கிகள் ஊடாக 30 வருடங்களில் செலுத்தக்கூடிய 6.25 வீத வட்டியுடனான கடன் திட்டமொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்களது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குடியிருப்புகளை அமைப்பதற்கு  இலவசமாக காணிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அனைத்து கட்டுமானப் பணிகளிலும் அரச மற்றும் தனியார் துறையினரை ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்திய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: