மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு


முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடது பக்கத்தில் உள்ள பேருந்து முன்னுரிமை ஒழுங்கையினூடாக மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராஜகிரிய பகுதியில் இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒழுங்கைகளில் மாறி மாறி பயணிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த ஒழுங்கையில் பயணிக்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டால், அவர்களுக்கு சற்று தாமதம் ஏற்படும். இருப்பினும், முச்சக்கர வண்டி சாரதிகள் பேருந்துகளைப் பின்தொடர்ந்து பொறுமையுடன் வாகனம் ஓட்டுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

எல்லா சாரதிகளும் எல்லா வழிகளிலும் வாகனம் ஓட்டினால், எங்களால் விதிமுறைகளை கடைபிடிக்கவோ அல்லது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவோ முடியாது.

கொழும்பு நகர எல்லைக்குள் இந்த போக்குவரத்து பாதை விதிகளை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பொலிஸார் நடத்தும் வீதி ஒழுங்கு குறித்த விழிப்புணர்வு வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

மேலும் வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே வீதி விதிமுறைகளை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகிறோம்” என அவர் மேலும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: