20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 19 ஆம் திருத்த சட்டத்தின் பல ஷரத்துக்களை மாற்றியமைத்து   அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்திற்கான குறைநிரப்பு வர்த்தமானி தற்போது வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை எண்ணிக்கை மற்றும் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும்  விடயங்களில் 20 ஆம் திருத்தத்தினூடாக பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.19வது திருத்தத்தினூடாக ஜனாதிபதியிடம் குறைக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் 20 ஆம் திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ளன.

அரசின் பல்வேறு நியமனங்களை முன்னெடுக்க 19ம் திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருந்த அரசியலமைப்புப் பேரவை என்ற பதம் நீக்கப்பட்டு நாடாளுமன்ற சபை என்ற முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த் தரப்பினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருடத்திற்குள் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பதுடன் பிரதமரை நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமைச்சர்களின்  எண்ணிக்கைக்கான வரையறையும் 20 ஆம் திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற ஷரத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: