20வது அரசியலமைப்பு திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் இருப்பின் நீதிமன்றத்தை நாடலாம்- நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு


20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் அதனைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்தை நாட முடியும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல என குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, நாட்டில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியுமா, முடியாதா எனும் விடயத்தை கொள்கை ரீதியாக தீர்மானிப்பதே சிறந்தது என தெரிவித்தார்.

இதேவேளை, 20வது திருத்தத்தில் உள்ள விடயங்களை பாராளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளதோடு 20வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: