20வது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது


20வது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக  உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “20வது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதாயின், அதற்கேற்ற சரத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் ஒரு வருடத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உயர்நீதிமன்றம் 20யை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால், அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது.

20 தொடர்பாக அரசாங்கமும் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பலருக்கு பல கருத்துக்கள் இருக்கின்றன.  எவ்வாறாயினும், நாட்டில் முழுமையான ஜனாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம்.

அரசியலமைப்பு என்பது அனைவருக்கும் உரித்தான ஒன்றாக இருக்க வேண்டும். அது ஜனாதிபதி- பிரதமரை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது.

இதனால் தான் 19ஐ  இல்லாதொழிக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தக் காரணங்களைக் கூறித்தான் பொதுத் தேர்தலிலும் நாம் வாக்குக்கேட்டிருந்தோம்” என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: