20வது திருத்த வரைவு இந்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு


அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் வரைவு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அதேவேளை சபையில் இடம்பெறும் விவாதங்களை அடுத்து மாற்றங்கள் செய்யப்படும் என அறிய முடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 20வது திருத்தத்தை முன்வைத்து தொடர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பின்னர் மாற்றங்களைச் செய்ய முடியும் என்று கூறியதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரும் வரை மட்டுமே 20 வது திருத்தம் என்றும் நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதங்களின் போது எந்தவொரு திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 20வது திருத்தம் வரைபு திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழு நியமிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இந்நிலையில் 20வது திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம், இருப்பினும் இறுதி திகதி முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவு எட்டப்படும் என்றும் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், முதலாம் வாசிப்பிற்காக 20வது அரசியலமைப்பு திருத்தம் இம் மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: