20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை


20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது.

ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகள் மற்றும் ஏனைய சிறுபான்மைக்கட்சிகள், குறித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் சர்வாதிகாரப்போக்குக்கு வழிவகுக்கும், சிறுபான்மையினரின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையுமென அதனை எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவில், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில, அமைச்சர் மொஹமட் அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில், 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குறித்த குழு, அதன் அறிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கையளித்தது.

இதனையடுத்து நேற்று குறித்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இருந்தபோதும் அந்த அறிக்கை இன்னும் சமர்க்கப்படவில்லை என அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வரைபில் கூறப்பட்டிருந்த சில விடயங்களை திருத்துவதற்கு, இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட இரட்டைக்குடியுரிமை கொண்டோர் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை, 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பதவிக்கு மாத்திரம் மட்டுப்படுத்த இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஜனாதிபதி பதவி தவிர்ந்த, ஏனைய அரசியல் பதவிகளுக்கு இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் போட்டியிட முடியும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: