இலங்கையின் சுற்றுலாத்துறை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது


இலங்கையின் விமான நிலையங்களை திறப்பதற்கான எண்ணம் தற்போதைய சூழ்நிலையில் கிடையாது என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இலங்கையிலுள்ள சுமார் 2.20 கோடி பேரின் சுகாதார பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிக்கையை வழங்கும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளதோடு,குறிப்பாக 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்தது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், இலங்கையின் சுற்றுலாத்துறையை பாரிய வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறான நிலையில், 2019ம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நவம்பர் மாதமளவில் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இது தவிர, உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா தொற்று தாக்கம், கடந்த மார்ச் மாதம் இலங்கையையும் தாக்கியது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் 20ம் திகதி நாடு முடக்கப்பட்டதுடன், விமான நிலையங்கள் மூடப்பட்டன.

சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்த முடக்க நிலைமை, சரியாக ஏப்ரல் மாதம் 20ம் திகதி முதல் படிப்படியாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படும் இலங்கையர்களுக்கு, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றமை நாளாந்தம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், வீழ்ச்சி கண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்படும் வரை விமான நிலையங்களை திறக்க முடியாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

சுற்றுலா துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ள நிலையில், இலங்கையில் இன்று சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன்படி, கொரோனா அச்சுறுத்தலை இலங்கை எதிர்நோக்குவதற்கான முன்னர் 2019ம் ஆண்டு சுற்றுலாத்துறை 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக 2018ம் ஆண்டு பதிவாகியுள்ளது.

இவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்த இலங்கையின் சுற்றுலாத்துறை, மீண்டும் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளமை, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: