20வது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைப்பு

19வது திருத்தத்தை நீக்கி 20வது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் 20வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் 20 வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20வது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19வது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரம் காண்பித்து வரும் நிலையில், இந்தத் திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய இடமளிக்கப் போவதில்லை என எதிர்த்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இது குறித்த சட்டமூலத்தை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள நல்ல சரத்துக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவும் தமது பரிந்துரைகளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டு போதும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். தெரிவித்துள்ளதோடு,20வது திருதத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் மக்களின் கருத்து அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 20ம் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்ததோடு,அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக ஐவர் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் மீளாய்விற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: