இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 1500 கிலோ விரலி மஞ்சளுடன் 3 பேர் கைது

 (க.கிஷாந்தன்)


இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவது அதிகரித்து வருகின்றது.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளைப்பகுதிக்கு விரலிமஞ்சள் கடத்தி வருவதாக தமிழக மண்டபம் கடலோர காவல் குழு காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து வேதாளைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து வாகனத்தையும் அதிலிருந்த மஞ்சளையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன் வாகனத்தில் இருந்த மூன்று பேரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது வேதாளை பகுதியை சேர்ந்த சகிபுல்லா, ரியாஸ் ஆகியோர் சகோதரர்கள் என்றும் மேலும் சத்தியமங்கலம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோக வெங்கடேஷ் என்பவர் வாகன ஓட்டி என்பதும் தெரிய வந்தவுடன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ மஞ்சளின் விலை சுமார் 2000 முதல் 2800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மஞ்சள் கடல் வழியாக கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் கடந்த வாரம் மன்னார் பகுதியில் சுமார் 2000 கிலோ மஞ்சளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த நிலையில் தற்பொழுது வேதாளை பகுதியில் இருந்து சுமார் 1500 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.No comments: